பலரின் வாழ்நாள் கனவான சொந்த வீட்டை நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பாகவும், அழகாகவும் பராமரிப்பது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிய அளவிலான பழுதுகளைத் தொடக்கத்திலேயே கண்டறிவதன் மூலம் பெரிய அளவிலான பண இழப்பைத் தவிர்க்க முடியும்.

மழைக்காலத்தில் நீர் கசிவு ஏற்படாமல் இருக்க வீட்டின் மேல்தளம் மற்றும் சுவர்களில் விரிசல்கள் உள்ளதா என்பதை ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்வது அவசியமாகும். மின் வயரிங், சுவிட்சுகள் மற்றும் பிளக்குகளைத் தகுதியான மின்பொறியாளர் மூலம் சோதிப்பது மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்கும். அதேபோல், குழாய்கள் மற்றும் தொட்டிகளில் கசிவு உள்ளதா எனப் பார்ப்பதன் மூலம் தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம்.

கதவுகள், ஜன்னல்களில் கரையான் தாக்கம் அல்லது துருப்பிடித்தல் உள்ளதா என்பதைப் பரிசோதித்து, கீல்களுக்கு எண்ணெய்விட்டுப் பராமரிக்க வேண்டும். மேலும், கரையான் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மரச்சாமான்களின் ஆயுளை நீட்டிக்கும். மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைப்புகளைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். வீட்டின் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவதுடன், தேவையற்ற களைச் செடிகளை அகற்றி வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி, ஏசி மற்றும் வாட்டர் ஹீட்டர் போன்ற மின்சாதனங்களுக்குத் சர்வீஸ் செய்வதன் மூலம் அவற்றின் ஆயுள் அதிகரிப்பதோடு மின் பளுவையும் குறைக்கலாம்.

வீட்டைப் பராமரிப்பதை ஒரு செலவாகக் கருதாமல், எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த முதலீடாகக் கருதி ஆண்டுதோறும் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் குடும்பத்திற்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய முடியும்.