இன்றைய நவீன காலகட்டத்தில் பல பெண்கள் அலுவலக வேலை மற்றும் வீட்டுப் பணிகள் என இரு முனைகளிலும் தொடர்ச்சியாகச் செயல்படுவதால், அவர்களது உடல் நலன், குறிப்பாக முதுகுத்தண்டு பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவர்கள் சில எளிய வழிமுறைகளைப் பரிந்துரைத்துள்ளனர்.
கணினி முன்பு பல மணி நேரம் ஒரே நிலையில் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது முதுகுத்தண்டில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தலை மற்றும் கழுத்தை முன்னோக்கி வைக்கும் பழக்கம் மற்றும் தவறான அமர்வு முறை ஆகியவை முதுகுத் தசைகளைச் சோர்வடையச் செய்கின்றன. அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் சமையல் செய்வது, துணி துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது மற்றும் குழந்தைகளைக் கவனிப்பது போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தொடர்வதால், ஏற்கனவே சோர்வடைந்த தசைகளுக்கு மீண்டு வருவதற்கான அவகாசம் கிடைப்பதில்லை. தரையில் குனிந்து வேலை செய்வது, இடுப்பை மட்டும் வளைத்துப் பொருட்களைத் தூக்குவது போன்ற முறையற்ற உடல் அசைவுகள் முதுகில் தீவிர வலியை உருவாக்கக்கூடும். குறிப்பாக, தரையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது முழங்கால்களை மடக்கி உடலை இறக்குவது போன்ற முறைகளைக் கையாள வேண்டும். அலுவலகத்தில் பணிபுரியும் போது குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடப்பது, தோள்களை அசைப்பது போன்ற சிறு அசைவுகள் உதவும். மேலும், வீட்டுப் பணிகளை மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் உடல் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
முதுகுவலி தொடர்ந்தால் உடனடியாக வலிநிவாரண மருந்துகளைத் நாடுவதைத் தவிர்த்துவிட்டு, ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகித் தகுந்த உடற்பயிற்சி அல்லது சிகிச்சையைப் பெறுவது நீண்டகாலப் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். சரியான ஓய்வும் விழிப்புணர்வும் மட்டுமே பெண்களின் உடல் நலனைப் பாதுகாக்கச் சிறந்த வழியாகும்.
