மத்தியப் பிரதேச மாநிலம் குனா பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் இராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்துப் பேசிய சர்ச்சைப் பேச்சு சக பெண் எம்.எல்.ஏ-வின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுடன், மேடையிலேயே இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குனா நகரில் உள்ள நானாகேடி மண்டி வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ‘பலராம் விவசாயத் திருவிழா-2026’ நடைபெற்றது. இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா, விவசாயம் மற்றும் நாட்டின் நடப்பு நிலவரங்கள் குறித்துப் பேசும்போது இராமாயணம் மற்றும் மகாபாரத நிகழ்வுகளைக் குறிப்பிட்டார். அப்போது சீதை அபகரிப்பு மற்றும் திரௌபதி அவமானம் குறித்த நிகழ்வுகளைத் தன் வாதத்திற்குக் கொண்டுவந்து, அந்தப் போர்களில் ஆண்கள் மட்டுமே மாண்டனர் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். மேலும் பிருத்விராஜ் சௌகான் – சம்யுக்தா கதையையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். பன்னாலால் சாக்யாவின் இந்தப் பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கருதி, அங்கிருந்த சச்சோடா தொகுதி பாஜக பெண் எம்.எல்.ஏ பிரியங்கா பெயின்ச்சி உடனடியாகத் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இதனையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே மேடையிலேயே விவாதம் முற்றியது. தான் பல நூல்களைப் படித்து வரலாற்றைத் தெரிந்து கொண்டுள்ளதாகக் கூறி பன்னாலால் சாக்யா தன் கருத்தை நியாயப்படுத்தியதுடன், பிரியங்கா பெயின்ச்சியை அமருமாறு கூறினார். இந்தச் சம்பவம் விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சிறிது நேரம் சங்கடத்தை ஏற்படுத்தியது.
#WATCH | ‘Ramayan, Mahabharat Mein Mahila Koi Nahi Mari, Sab Aadmi Mare…’: Guna BJP MLA Pannalal Shakya’s Controversial Statement Viral #MPnews #MadhyaPradesh #ViralNews pic.twitter.com/Imt4C41veq
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 19, 2026
“>
விவசாயம் தொடர்பான விழாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமேடையில் ஒருவரையொருவர் எதிர்த்து விவாதம் செய்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
