மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், வீட்டின் முன்பு குப்பை கொட்டியது தொடர்பாக ஏற்பட்ட தகராறு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அண்டை வீட்டைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் தாக்குதலாக மாறியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். காலனியில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலில் மனைவியும் பின்னர் கணவரும் உயிரிழந்தனர்.
சம்பவத்தன்று காலை, மணிஷா கேசரேகர் தனது வீட்டின் முன்பு குப்பை கொட்டப்பட்டிருப்பதை கவனித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் 52 வயதான அண்டை வீட்டுக்காரர் ஃபரீத் அப்துல் ஷேக்கிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அதைத் தடுக்க மணிஷாவின் கணவர் மோகன் நாகப்பா கேசரேகர் வெளியே வந்துள்ளார். அப்போது தகராறு மேலும் பெரிதானதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஃபரீத் தனது வீட்டுக்குள் சென்று சுத்தியலும் கத்தியையும் எடுத்து வந்து தம்பதியை தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மோகனின் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவரை காப்பாற்ற முயன்ற மணிஷாவுக்கும் பலமுறை கத்திக்குத்து காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை தடுக்க அவர்களது பதின்வயது மகளும் முயன்றதாகவும், பின்னர் தாக்குதல் நடத்தியவர் மிதிவண்டியில் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த தம்பதி ம அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆகஸ்ட் 16-ஆம் தேதி மாலை மணிஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 45 வயதான மோகன் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அவரும் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக போலீஸார் ஃபரீத் அப்துல் ஷேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 17 வயது மகளும், 10 வயது மகனும் உள்ளனர். கர்நாடகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாங்லியில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
