உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில், டெலிவரி ஊழியர் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த கைபேசி திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். இந்தச் சம்பவத்தில் அவரது முகத்தில் தையல்களுக்குப் பதிலாக ஸ்டேப்ளர் ஊசிகள் பொருத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகர் மாவட்டம் அட்ரௌலி பகுதியைச் சேர்ந்த சச்சின், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை ராம்காட் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, இவரது சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த மோட்டோரோலா கைபேசி எதிர்பாராதவிதமாக திடீரென வெடித்துத் தீப்பிடித்தது. மொபைல் வெடித்த வேகத்தில் அவரது ஆடைகளிலும் தீ பரவியதால், உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சச்சின் வலியால் அலறித் துடித்துத் தரையில் விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீஸார், காயமடைந்த சச்சினை மீட்டு அட்ரௌலியில் உள்ள சமூக சுகாதார மையத்தில் முதலுதவிக்காகச் சேர்த்தனர். பின்னர் நிலைமை மோசமானதால் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு வழக்கமான தையல்களுக்குப் பதிலாக ஸ்டேப்ளர் ஊசிகள் குத்தப்பட்டிருந்தது பலரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ள சச்சின், அதிர்ச்சி மற்றும் காயங்கள் காரணமாக தற்பொழுது பேச முடியாத நிலையில் உள்ளார். எனினும், அவரது முகம் மற்றும் கைகளில் ஏற்பட்டுள்ள ஆழமான தீக்காயங்கள் தீவிரமாகவே தொடர்வதாகக் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். பிரபல நிறுவனத்தின் கைபேசி திடீரென வெடித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
