அமெரிக்க தொழிலதிபரும் ‘மைக்ரோஸ்ட்ரேட்டஜி’ நிறுவனத்தின் நிறுவனருமான மைக்கேல் செய்லர், ChatGPT உதவியுடன் ரூ.1,42,708 கோடி நிதி திரட்டிய ரகசியத்தை ‘டைரி ஆஃப் ஏ சிஇஓ’ பாட்காஸ்டில் பகிர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவை வெறும் வேலைகளை எளிமையாக்க மட்டும் பயன்படுத்தாமல், நிதியியலில் இதுவரை யாரும் முயற்சிக்காத புதிய நிதி திரட்டும் மாதிரியை உருவாக்கியதே இவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இவரது நிறுவனம் பிட்காயின்களை அதிக அளவில் வாங்கி வருகிறது. இதனால் பிட்காயின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இவரது சொத்து மதிப்பும் மாறக்கூடியதாக இருந்தது. இந்நிலையில், நிறுவனத்தின் மூலதனத்தைப் பெருக்கவும் பிட்காயினில் தொடர்ந்து முதலீடு செய்யவும், 2025-இல் ChatGPT உதவியுடன் ‘பெர்பெச்சுவல் பிரிஃபர்டு ஸ்டாக்’எனும் புதிய பங்குகளை இவர் உருவாக்கினார்.

STRK மற்றும் STRF எனப் பெயரிடப்பட்ட இந்தச் சிறப்புப் பங்குகள் மூலம் பெறப்பட்ட முதலீடுகள் முழுமையாகப் பிட்காயின்களை வாங்குவதற்கே பயன்படுத்தப்பட்டன. இதுவரை எந்த நிறுவனமும் முழுமையாகப் பிட்காயின்களை வாங்க இதுபோன்ற ஒரு முதலீட்டு திட்டத்தை உருவாக்கியதில்லை என்பதால், வால்ஸ்ட்ரீட் வங்கியாளர்களும் வழக்கறிஞர்களும் ஆரம்பத்தில் பல கேள்விகளை எழுப்பினர்.

இருப்பினும், கடந்த ஆண்டில் பிட்காயின் விலை வீழ்ச்சியடைந்து நிறுவனத்தின் பொதுப் பங்குகளின் மதிப்பு சுமார் 80% வரை சரிந்தபோதிலும், மைக்கேல் செய்லர் தனது திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. சந்தை மாற்றங்களை எதிர்கொள்ளவும், கடனுக்கான வட்டி மற்றும் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகையை வழங்கவும் நிறுவனம் சில பிட்காயின்களை விற்பனை செய்தது.

மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான செயல்பாட்டுச் செலவுகளுக்காகப் பாதுகாப்பாக 4 பில்லியன் டாலர் ரொக்க இருப்பையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. “AI செய்யக்கூடிய சாதாரண விஷயங்களைக் கற்றுக்கொள்வதை விட, இதுவரை யாருமே செய்யாத ஒரு விஷயத்தை AI-யை வைத்து எப்படிச் செய்ய வைப்பது என்பதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.