காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மக்களுக்குக் காட்சியளிக்கும் மிகச் பிரசித்தி பெற்ற ஆயிரங்காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் கலிங்க மன்னன் தன் நாடு செழிக்க தினமும் ஆயிரம் பொருட்களைக் கொண்டு காளியை வழிபட்டு வந்தான். மன்னனின் ஆயுட்காலம் முடிந்ததும், அம்மனின் அசரீரி வாக்கின்படி காளி தேவியின் உருவத்தைச் மரப்பேழையில் வைத்து கடலில் மிதக்கவிட்டான்.
அந்த மரப்பேழை மிதந்து வந்து காரைக்கால் திருமலைராயன்பட்டினம் கரையை அடைந்தது. அங்கு வாழ்ந்த சிவநேசர் என்பவரின் கனவில் அம்மன் தோன்றி, தசரத நதியில் மிதந்து வரும் பேழையை எடுத்து கோவில் கட்டி பூஜிக்குமாறு கூறினார். மறுநாள் ஊர்மக்கள் மேளதாளத்துடன் சென்று பேழையைத் திறந்து பார்த்தபோது, அதில் ஒளிப்பிழம்பாய் காளி தேவியின் உருவமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆயிரம் பொருட்களைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும் என்ற ஓலைச்சுவடியும் இருந்தது.
அதன்படியே சிவநேசர் அம்மனுக்குக் கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினார். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வைகாசி மாத வளர்பிறையில் இந்தப் பேழை திறக்கப்படுகிறது. பேழையைத் திறப்பதற்கு முன்பாகக் ‘கலீர்’ என அம்மனின் கொலுசுச் சத்தம் கேட்பது இன்றளவும் நடக்கும் ஓர் அற்புத நிகழ்வாகும். அம்மனுக்குச் சாற்றப்படும் மாலைகள், பலகாரங்கள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் மட்டுமே படைக்கப்படுவதால் இவள் ‘ஆயிரங்காளி’ என்று அழைக்கப்படுகிறாள்.
வைகாசி வளர்பிறையில் ராஜசோளீஸ்வரர் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் அம்மன் மற்றும் படையல் பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்படும். பக்தர்கள் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே அம்மனைத் தரிசிக்க முடியும். வெள்ளிக்கிழமை விடியற்காலைக்கு முன்பாக அம்மன் மீண்டும் மரப்பேழையில் வைக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பேழைக்குள் வைக்கப்பட்ட பூமாலைகளும் எலுமிச்சம்பழங்களும் வாடாமல், கெட்டுப்போகாமல் அப்படியே புதியது போல் இருப்பது இந்த தலத்தின் மிகப்பெரிய அதிசயமாகக் கருதப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு காட்சியளித்த ஆயிரங்காளி அம்மன், மீண்டும் வரும் 2027 ஆம் ஆண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கப் போகிறாள். கேட்கும் வரங்களை அள்ளித்தரும் இந்த ஆயிரங்காளி அம்மனைத் தரிசித்து நாமும் நன்மைகளைப் பெறுவோம்.
