ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 27 வயதான மகேஷ் மீணா கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி உயிரிழந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்று காலை தனது மனைவி கவிதாவுடன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற மகேஷ், மாலையில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் விஸ்வகர்மா பகுதியில் உள்ள 14-ஆம் எண் பாலம் அருகே அவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மகேஷின் மரணம் இயற்கையானது என முதலில் கருதப்பட்ட நிலையில், அவரது தந்தை பாபுலால் மீணாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது மற்றொரு மகனுடன் சேர்ந்து சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அந்தக் காட்சிகள், மனைவி கவிதா மட்டும் மகேஷை அழைத்து வந்ததாக கூறிய தகவலுடன் முரண்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதில் கவிதாவுடன் மூன்று இளைஞர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கணேஷ், அஜய் மீணா, கோலு பிரஜாபத் ஆகியோரின் பெயர்கள் வெளியாகியதாகவும், இதன் அடிப்படையில் கவிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது மகேஷின் தந்தை கொலை புகார் அளித்ததாகவும் செய்தி தெரிவிக்கிறது.

 

மேலும், கவிதாவுக்கும் கணேஷுக்கும் சுமார் 9 ஆண்டுகளாக தொடர்பு இருந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் இருவருக்கும் தொடர்பு நீடித்ததாகவும், சில சந்தர்ப்பங்களில் கவிதா கணேஷுடன் சென்றதாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மகேஷின் மரணத்துக்குப் பிறகு அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்ற நிலையில், அஸ்தியை கரைப்பதற்காக கவிதாவும் குடும்பத்தினருடன் ஹரித்வாருக்குச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குடும்பத்தினரிடம் இருந்ததாகக் கூறப்படும் சில காணொளிகளில் மகேஷின் மரணம் குறித்து கேட்கப்பட்டபோது கவிதா சிரித்ததாகவும், மேலும் சில கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அந்தக் காணொளிகளையும் குடும்பத்தினர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் இயற்கை மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள், உடற்கூராய்வு அறிக்கை, மருத்துவ அறிக்கை, தொலைபேசி தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிதா உள்ளிட்ட நான்கு பேர் மீது குடும்பத்தினர் கொலை குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை. தற்போது போலீஸ் விசாரணை தொடர்வதால், மகேஷின் மரணத்துக்கான முழுமையான காரணம் விசாரணை முடிவில்தான் உறுதியாகும்.