காட்டுப் பாதையில் பயணம் செய்த ஒரு காரை வழிமறித்த யானை, ஆக்ரோஷமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானை முன்னால் வரும்போது காரை ஓரிடத்தில் நிறுத்தாமல், தொடர்ந்து நகர்த்த முயன்றது டிரைவர் செய்த மிகப்பெரிய தவறாக அமைந்தது.

இதனால் கோபமடைந்த ‘யானை’, காரைத் தலைகீழாகக் கவிழ்க்க முயன்றதோடு, தனது தும்பிக்கையை ஜன்னல் வழியாக உள்ளே நுழைத்து ஆட்டம் காட்டியது. அந்த நொடியில் காரின் உள்ளே இருந்த குடும்பத்தினர் மரண பயத்தில் உறைந்து போயினர்.

யானையிடம் சிக்கினால் உயிர் பிழைப்பது கடினம் என உணர்ந்த அந்தப் பயணிகள், காரை அங்கேயே நடுத்தெருவில் விட்டுவிட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடித் தப்பினர்.

அதிர்ஷ்டவசமாக யானை அவர்களைத் துரத்தாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. 45 நொடிகள் ஓடும் இந்த பகீர் வீடியோவை இதுவரை 61,000-க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். “வனப்பகுதிகளில் செல்லும்போது விலங்குகளிடம் வீரத்தைக் காட்டாமல், விவேகத்துடன் இருப்பதே புத்திசாலித்தனம்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்குத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.