ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெச்.ஆர் (HR) துறை அனுப்பிய வினோதமான மின்னஞ்சல் இப்போது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த மின்னஞ்சலில், “வேலை செய்யும் இடத்தில் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இனி வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் பாரம்பரிய உடைகளை (Ethnic Wear) அணிய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை யாராவது சாதாரண அலுவலக உடையில் வந்தால், அவர்களுக்கு ₹100 அபராதம் விதிக்கப்படும் என்றும், மூத்த அதிகாரிகளுக்கு இந்த அபராதம் ₹500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Just got this email from my HR. Do they have nothing better to do?
byu/Beautiful-Apricot-36 inIndianWorkplace
இந்த அபராதத் தொகையை நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதிக்கு (CSR Fund) வழங்கப்போவதாக நிறுவனம் கூறினாலும், “என்னால் புது உடை வாங்க முடியாது, இது என்ன அநியாயம்?” எனப் பெண் ஊழியர் ஒருவர் ரெடிட் (Reddit) தளத்தில் குமுறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய சட்ட நிபுணர்கள், ஊழியர்களின் சம்பளத்தில் இத்தகைய அபராதங்களை விதிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என்று எச்சரிக்கின்றனர்.
இந்திய ஊதியச் சட்டம் 2019-ன் படி (Code on Wages, 2019), வேலைக்கு வராமல் இருப்பது அல்லது கடனைத் திருப்பிச் செலுத்துவது போன்ற காரணங்களுக்காக மட்டுமே சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடியும்; ஆடை அலங்காரக் காரணங்களுக்காக அபராதம் விதிக்கச் சட்டத்தில் இடமில்லை.
மேலும், சி.எஸ்.ஆர் (CSR) என்பது ஒரு நிறுவனம் தனது லாபத்தில் செய்ய வேண்டிய சமூகக் கடமையே தவிர, ஊழியர்களை மிரட்டி நிதி திரட்டும் வழிமுறை அல்ல. “இந்த அபராதத்திற்கு முறையான ரசீது கேளுங்கள், அப்போதுதான் அவர்களின் சாயம் வெளுக்கும்” என நெட்டிசன்கள் அந்தப் பெண்ணுக்குப் பல ஐடியாக்களை வழங்கி வருகின்றனர்.
