தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,

தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வீசிய ”மிக்ஜாம் புயல்” காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

முன்னதாக மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்திருந்தது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இது குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும்,ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டன.

மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிட்டு,   தேசிய பேரிடர் மீட்பு படை,  மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை ஆகிய துறையை சார்ந்த மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். மீட்பு பணிகளுக்கு தேவையான டீசல் மோட்டார் பம்பு செட்டுகளும், படகுகளும்,  ஜேசிபி இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை புயல் – மழையின் தாக்கத்திற்கு பிறகு உடனடியாக களத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.

 

மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப் படுத்துவதற்காக 20 அமைச்ச பெருமக்களும்,  50க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் முடிக்கிவிடப்பட்டன.

இது மட்டுமின்றி 4000 மேற்பட்ட மின்வாரிய பணியாளர்களும், 2000க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களும்,  ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் 26000-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பணிக்கான தனி அலுவலர் நியமிக்கப்பட்டு, பெரிய அளவில் சமையலறைகள் நிறுவப்பட்டு,  தரமான உணவுகள் சமைக்கப்பட்டு சென்னை மாவட்டத்தில்

8.12.2023 வரை மூன்று வேளை  உணவாக மொத்தம் 47 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மொத்தமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இதுவரை 51 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால் ஆகிய பொருட்கள் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்டு, முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அவற்றின் விவரம் பின்வருமாறு;

பால் பவுடர் ; 58,222 கிலோ

குடிநீர் பாட்டில்கள் ; 9,67,000

பிரட் பாக்கெட் ; 2,65,000

பிஸ்கட் பாக்கெட்; 10,38, 175

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மழை நீர் தற்போது வடிந்துள்ள நிலையில் அந்த பகுதியில் தற்போது 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தி பேரிடர் மீட்பு குழுவினர் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ முகாம்களும் தேவையான இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

 

இவ்வாறு பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உள்ளதால்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்கப்படுவது  தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று 9.12.2023 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,  தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர் கலந்து கொண்டனர். சேதம் குறித்தும்,  வழங்கப்பட்ட வேண்டிய நிவாரணத் தொகை குறித்தும்  ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, இதன் அடிப்படையில்,

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசுநிவாரணம் அறிவித்து  பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகையை உரிய நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேபோல் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சேதமடைந்த குடிசைக்கான நிவாரணம் 5 ஆயிரத்திலிருந்து 8000 ஆக உயர்த்தி வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். 33 சதவீதத்துக்கு மேலாக சேதமடைந்துள்ள பயிர்கள் 1 ஹெக்டேருக்கு 17,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமுற்று இருப்பின் 33 சதவீதத்திற்கும் மேலாக சேதமுத்து இருந்தால் ஹெக்டேர் ஒன்றுக்கு 22, 500 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட 33 சதவீதம் அதற்கு மேலாக மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு  8,500 வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். எருது,  பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்பு நிவாரணமாக 37,500 வழங்கவும், வெள்ளாடு  –  ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 4000 வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல் சேதமடைந்த படகுகள் மற்றும் மலைகள்  வலைகள் நிவாரண உதவிகளை பொறுத்த வரை முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்,

பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும்,  முழுமையாக சேதம் அடைந்த வல்லம் வகை படங்களுக்கு 1 லட்சம் ரூபாயும்,  முழுவதுமாக சேதம் அடைந்த இயந்திர படங்களுக்கு 7.50 லட்சம் வழங்குவதாகவும்,  சேதம் அடைந்த வலைகளுக்கு ரூ.15,000 வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம் தமிழக அரசு குறிப்பாக அதிமுக குற்றசாட்டுக்களுக்கு பதில் அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் DMK அரசுக்கு எதிராக மக்கள் மனதில் தீயை போல நெருப்பாக எரிந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் மூலம் தமிழக அரசின் செயல்பாடு இருந்துள்ளதால் அறிக்கை மூலம் ADMK அலற வைத்த திமுக என்று திமுகவினர் கருத்து கூறி வருகின்றனர்.