மும்பை மாநகரின் உயிர்நாடியான ‘பெஸ்ட்’ பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், தனது சுயநலத்திற்காகப் பயணிகளின் நேரத்தையும், பொதுமக்களின் போக்குவரத்தையும் அலட்சியப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் முலுண்ட் பகுதியில் உள்ள எம்.ஜி. சாலையில் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து ஓட்டுநர், திடீரென தனக்குச் ‘சேவ் புரி’ சாப்பிட வேண்டும் என்ற ஆசையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் பேருந்தை நிறுத்தியுள்ளார்.

சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகப் பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு அவர் சிற்றுண்டி வாங்கியதால், பின்னால் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவித்தன. இது குறித்துக் கேள்வி கேட்ட இளைஞர் ஒருவரை, அந்த ஓட்டுநர் மிக மோசமாகத் திட்டியதுடன் அங்கிருந்து பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத் தொடர்ந்து, பெஸ்ட் நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

“>

 

சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் பொறுப்பற்ற செயல் மற்றும் பொதுமக்களிடம் அவர் நடந்துகொண்ட விதம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ள பெஸ்ட் நிர்வாகம், அவர் மீது சட்டப்பூர்வமான மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு முலுண்ட் பணிமனை மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

சேவ் புரி சாப்பிடும் ஆசையில் ஓட்டுநர் செய்த இந்த அலட்சியமான செயல், அவருக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.