தெலங்கானா மாநிலம் ஜங்காவ் மாவட்டத்தில், திருப்பதிக்குச் செல்ல வழி கிடைக்காத விரக்தியில் நபர் ஒருவர் அரசுப் பேருந்தைத் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னூரு கிராமத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்ற டிராக்டர் ஓட்டுநர், திருப்பதிக்கு ரயிலில் செல்ல பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்தார். இதனால் மதுபோதையில் இருந்த அவர், ஜங்காவ் பேருந்து நிலையத்திலிருந்த அரசுப் பேருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் பயணத்தைத் தொடங்கினார்.

டிராக்டர் ஓட்டிய அனுபவம் இருந்ததால், அந்தப் பேருந்தைத் திறமையாகச் ஸ்டார்ட் செய்து சுமார் 21 கிலோமீட்டர் தூரம் வரை அவர் ஓட்டிச் சென்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கராஜுப்பள்ளி சுங்கச்சாவடியை அவர் அடைந்தபோது, பேருந்தைச் சரியாகக் கையாள முடியாமல் தடுமாறியதால், அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதினார். அவரது சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கவனித்த சுங்கச்சாவடி ஊழியர்கள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெங்கண்ணாவைக் கைது செய்து விசாரணை நடத்தினர். தான் பேருந்து திருடவில்லை என்றும், திருப்பதிக்குச் செல்லவே பேருந்தை எடுத்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், உரிய அனுமதியின்றி அரசுப் பேருந்தை எடுத்துச் சென்றது மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.