நியூசிலாந்தில் பணிபுரியும் யமிகா காந்தி என்ற இந்தியப் பெண், அங்குள்ள பணிச்சூழல் குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கே அலுவலகம் வெறிச்சோடியிருக்கும் சூழலைத் தனது வீடியோவில் காட்டிய அவர், அங்கு சக ஊழியர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதையும், மற்றவர்களின் தனிப்பட்ட நேரத்தை மதிப்பதையும் கண்டு வியந்துள்ளார்.
தான் செய்யும் சாதாரண வேலைக்குக் கூட அங்குள்ளவர்கள் பாராட்டுவது தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகக் கூறும் அவர், அங்கு மேலாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்துவதையும், கூடுதல் நேரம் வேலை செய்தால்கூட அதற்குப் பதிலாக வேறு நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ள ஊக்குவிப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான பணி கலாச்சாரத்தை ஒப்பிடும் யமிகா, இந்தியாவில் கடின உழைப்பு என்பது வேலை செய்யும் நேரத்தின் அளவை வைத்து அளவிடப்படுவதாகவும், ஆனால் நியூசிலாந்தில் ஊழியர்கள் மதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
View this post on Instagram
“>
அங்கு வேலை நேரத்தில் முழு கவனம் செலுத்திவிட்டு, மீதி நேரத்தைத் தங்கள் குடும்பம் மற்றும் பொழுதுபோக்குகளுக்காக மக்கள் செலவிடுவதைக் கண்டு தான் வியப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய பணிச்சூழல் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவிலும் இத்தகைய ஆரோக்கியமான பணி கலாச்சாரம் தேவை என்று பலரும் கமெண்ட் பிரிவில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
