சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு நபரின் வியாபார யுக்தி, வேலை தேடி அலைபவர்களையும், ஐடி ஊழியர்களையும் கூட வாயடைத்துப் போகச் செய்துள்ளது. இந்த நபர் வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் தலா 100 ரூபாய் வீதம் 50 குடைகளை வாங்கியுள்ளார். பின்னர், பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு வெளியே போய் குடைகளுடன் நின்றுள்ளார். மழையில் நனையாமல் வீட்டிற்குச் செல்ல நினைத்த மக்கள், மெட்ரோ நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடனேயே அவரிடம் போட்டிப் போட்டுக் கொண்டு குடைகளை வாங்கத் தொடங்கினர்.

​அங்கு வந்த அவசரத் தேவையைப் பயன்படுத்திக் கொண்ட அவர், ஒரு குடையை 200 ரூபாய்க்கு விற்கத் தொடங்கி, வெறும் ஒரே மணி நேரத்தில் 50 குடைகளையும் விற்றுத் தீர்த்துள்ளார். 5,000 ரூபாய்க்கு வாங்கிய குடைகளை 10,000 ரூபாய்க்கு விற்று, வெறும் ஒரு மணி நேரத்தில் 5,000 ரூபாய் லாபம் பார்த்துள்ளார்.

தினசரி மழை பெய்யும் இடங்களைத் தேடிப் பிடித்து, தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே இந்த வியாபாரத்தைச் செய்து பல மடங்கு சம்பாதிக்கும் இந்த நபரின் புத்திசாலித்தனம், வழக்கமான வேலைகளுக்குச் சென்று மாத சம்பளம் வாங்குபவர்களை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளதுடன், இணையத்தில் பெரும் விவாதத்தையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது.