மும்பை மாநகரப் போக்குவரத்துக் கழகமான ‘பெஸ்ட்’ பேருந்துகள், அண்மைக்காலமாகத் தொடர் விபத்துகளால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வரும் வேளையில், தற்போது ஓட்டுநர் ஒருவரின் பொறுப்பற்ற செயலால் மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. அண்மையில் நடந்த பேருந்து விபத்தில் மூன்று பேர் காயமடைந்து, பல வாகனங்கள் சேதமடைந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த விசித்திரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது பேருந்தை இயக்கிச் சென்ற ஓட்டுநருக்கு, திடீரென சாலையோரக் கடையில் ‘ஷேவ்பூரி’ சாப்பிட ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர், சற்றும் பொறுப்பின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக, பரபரப்பான அந்த முக்கிய சாலையின் நடுவிலேயே பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்து சாலையை மறித்து நின்றதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இந்த அடுக்கற்ற போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த இளைஞர் ஒருவர், ஓட்டுநரின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவரிடம் தட்டிக்கேட்டு நியாயம் தேடியுள்ளார். அதற்கு சற்றும் வருந்தாமல் அநாகரிகமாகப் பதிலளித்த ஓட்டுநர், அந்த இளைஞரை ஆபாச வார்த்தைகளால் வசைபாடியதோடு, “உன் பெற்றோர் மற்றும் காவல்துறையினரிடம் போய் இதைக் காட்டு, நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்” என்று சவால் விட்டுவிட்டு பேருந்தை வேகமாக எடுத்துச் சென்றுள்ளார்.

 


இந்த அத்துமீறல் முழுவதையும் அந்த இளைஞர் தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, அது காட்டுத்தீயாய் பரவி பொதுமக்களின் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, ‘பெஸ்ட்’ பொதுத்தொடர்பு அதிகாரி சுசேதா உதாளே, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிமனை மேலாளருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். வெறும் 30 ரூபாய் ஷேவ்பூரி ஆசைக்காக, அந்த ஓட்டுநர் தற்போது கடுமையான துறைரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.