மருத்துவத் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, வரலாற்றிலேயே முதன்முறையாக மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட ‘ஹியூமனாய்டுரோபோக்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த விசித்திர சோதனையில், பெரிய விலங்கு ஒன்றின் உடலில் இருந்து பித்தப்பை வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. ஒரு சோதனையில் இரண்டு ரோபோக்கள் முற்றிலும் ரிமோட் மூலம் இயக்கப்பட்டு இந்தச் சிகிச்சையைச் செய்தன. மற்றொரு சோதனையில், மனிதர்களின் உதவியோடு ஒரு ரோபோ இந்த ஆபரேஷனைச் செய்து முடித்தது.

தற்போதைய மருத்துவ உலகில் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அவை சுமார் 800 கிலோ எடையுடன், ராட்சத வடிவில் பல கைகளுடன் காணப்படுபவை. ஆனால், தற்போது சாதனை படைத்துள்ள இந்த மனிதவடிவ ரோபோக்கள் வெறும் 5 அடி உயரமும், 27 கிலோ எடையும் மட்டுமே கொண்டவை. ‘சர்ஜி’ என்று செல்லப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்களை மிகக் குறைந்த செலவில், மருத்துவத் தேவைக்கேற்ப எளிதாக மாற்றி வடிவமைத்துக் கொள்ள முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

இந்த உலகளாவிய சாதனை குறித்துப் பேசிய கலிபோர்னியா பல்கலைக்கழக அறுவை சிகிச்சை நிபுணர் நிகிதா தரேஜா, இந்த ரோபோக்களை ரிமோட் மூலம் இயக்குவது மிகவும் எளிதாகவும் இயல்பானதாகவும் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ராட்சத மருத்துவக் கருவிகளுடன் ஒப்பிடுகையில், இந்த ரோபோக்கள் மிகக் குறைந்த இடத்தையே ஆக்கிரமிக்கின்றன. மேலும், இதன் விலையும் மிகக் குறைவு என்பதால், கிராமப்புறங்கள், போர்க்களங்கள் மற்றும் விண்வெளியில் கூட இந்த ரோபோக்களை எளிதாகப் பயன்படுத்தி மருத்துவச் சேவைகளை வழங்க முடியும்.

இருப்பினும், இந்தச் சோதனையின் போது ரோபோவை அடிக்கடி ரீ-காலிபரேட் செய்ய வேண்டியிருந்ததால், தற்போதைய முறைகளை விட அறுவை சிகிச்சைக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ஆரம்பக்காலத்தில் 6 மணி நேரம் எடுத்த லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் வெறும் 30 நிமிடங்களில் செய்யப்படுவதைப் போல, இந்தத் தாமதமும் விரைவில் சரிசெய்யப்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அறுவை சிகிச்சை செய்வது மட்டுமின்றி, மருத்துவக் கருவிகளை எடுத்துத் தருவது, ஆபரேஷன் தியேட்டரைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளையும் இந்த ‘சர்ஜி’ ரோபோக்களால் செய்ய முடியும் என்பதால், எதிர்காலத்தில் மனிதர்களும் ரோபோக்களும் ஒரு குழுவாக இணைந்து செயல்படும் புதிய மருத்துவப் புரட்சி ஏற்படும் என விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.