ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெற்ற தாயையே கார் ஏற்றிப் படுகொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள ஆயுஷி சர்மா என்ற இளம் பெண்ணின் பின்னணி குறித்து, போலீஸ் விசாரணையில் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி நீரஜ் சர்மா (45) என்ற பெண்மணி மீது ஸ்கார்பியோ கார் மோதி உயிரிழந்தார். இது விபத்து என முதலில் கருதப்பட்ட நிலையில், அது திட்டமிட்ட கொலை என்பதும், அதற்காக மகள் ஆயுஷி ரூ.7 லட்சம் கூலி கொடுத்திருப்பதும் அம்பலமானது.

இந்தச் சூழலில், கொலை செய்யப்படுவதற்கு  ஒரு வாரத்திற்கு முன்பு, ஜூன் 27 அன்று ஆயுஷி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீட்டின் படிக்கட்டில் தேங்காய் மற்றும் கறுப்பு நிற பொம்மை போன்ற பொருட்களை வைத்து எரிக்கும் சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. இதனால், கொலையை வெற்றிகரமாக முடிப்பதற்காக அவர் ஏதேனும் மாந்தீரிகம் அல்லது செய்வினை போன்ற தாந்த்ரீக வழிபாடுகளில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலைக்குக் பின்னணியில் பணத்தாசையே காரணியாக இருந்துள்ளது. ஆயுஷியின் தந்தை விஜய் சர்மா கடந்த ஆண்டு காலமானதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்ற அரசு வேலை, கருணை அடிப்படையில் தாய் நீரஜ் சர்மாவுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அந்த வேலை தனக்குத்தான் வேண்டும் என ஆயுஷி சண்டை போட்டுள்ளார். வேலை தாய்க்குச் சென்றதால் ஆத்திரமடைந்த ஆயுஷி, தனது பெரியப்பா மோகன் ஸ்வரூப் என்பவருடன் சேர்ந்து தாயைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளார். தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பமாக, ஆயுஷியின் சித்தப்பா ராகேஷ் சர்மா, ஆயுஷி மற்றும் பலராம் ஆகியோர் மீது மற்றொரு பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு தந்தை விஜய் சர்மா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்ததாகவும், சிகிச்சையின் போது அவரது உடலில் இருந்த ‘ஃபீடிங் டியூபை’                         வலுக்கட்டாயமாகப் பிடுங்கி அவரைக் கொலை செய்ததாகவும், எனவே தந்தையின் மரணம் குறித்தும் மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். தந்தை இறந்தபோது உடற்கூறாய்வு செய்யாமல் அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டதே இந்தச் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. தற்போது ஆயுஷி மற்றும் அவரது பெரியப்பா உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.