கரூர் விபத்து சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்று கரூர் மக்களுக்குத் தெரியும்” என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு தவெக அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
அன்று கரூரில் விபத்து நடந்த போது, இரவு 8:05 மணிக்குத் தான் அங்கிருந்த மாவட்ட எஸ்.பி-க்கே விபரம் தெரிந்தது என்றும், ஆனால் விபத்து நடந்த அடுத்த 5 நிமிடத்திற்குள்ளாகவே செந்தில் பாலாஜி எப்படி நேரலை கேமராக்களுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் என்ன விபத்து நடக்கும் என மருத்துவமனை பக்கத்திலேயே காத்துக் கொண்டிருந்தாரா என்றும், இந்த ஒட்டுமொத்த சம்பவமும் அரை மணி நேரத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகம் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “அன்றைய தினம் இரவு 12 மணிக்கு அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூருக்கு அவசரமாக வர வேண்டிய அவசியம் என்ன? அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் அவர் தனது சொந்த வீட்டு விவகாரங்களைத் தவிர வேறு எதற்காவது இப்படி நள்ளிரவில் கிளம்பி இருக்கிறாரா? அரை மணி நேரத்திற்குள் எப்படி உங்களால் தனி விமானத்தை தயார் செய்ய முடிந்தது?” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். மேலும், ஒரே இரவில் 40 பேரின் உடல்களையும் உடற்கூறாய்வு செய்ய 30 முதல் 40 மருத்துவர்களை உடனே எங்கிருந்து வரவழைத்தீர்கள் என்றும், ஆதாரங்களை அழிக்கவே அவசர அவசரமாக உடல்கள் அனைத்தும் இரவோடு இரவாகத் தகனம் செய்யப்பட்டன என்றும், தவெக தொண்டர்களை மருத்துவமனைக்குள் விடாமல் அடித்து விரட்டியது யார் என்றும் சாடினார்.
முன்னதாக அமலாக்கத்துறை கைது செய்ய வந்தபோது, அரசு மருத்துவமனைக் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டு அழுது கதறியவர் தான் இந்த செந்தில் பாலாஜி என்றும், தற்பொழுது கூட தவெக எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேசி ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் இவருக்குத் தொடர்புடைய நபர்களிடம் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது என்றும் அமைச்சர் நிர்மல்குமார் அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
