இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில், பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் வேலை தேடி அலைந்த தனது கசப்பான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது தற்போதைய கடுமையான வேலைவாய்ப்புச் சந்தை குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு பி.டெக் படித்து முடித்த அந்த இளைஞர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் லிங்க்ட்இன், பல்வேறு வேலைவாய்ப்பு இணையதளங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் மூலமாக 500-க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவ்வளவு விண்ணப்பங்களில் இருந்து அவருக்கு ஒரு நிறுவனத்தில் இருந்து கூட நேர்காணலுக்கான அழைப்பு வரவில்லை. இந்த விசித்திரமான மற்றும் ஏமாற்றமளிக்கும் சூழலை ‘ரெடிட்’  பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய நிலைமை தனக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவில் உருகிய அந்த இளைஞர், தான் ஒன்றும் பெரிய சம்பளத்தையோ அல்லது தனது கனவு நிறுவனத்தையோ தேடவில்லை என்றும், தனது வாழ்க்கையைத் தொடங்குவதற்கும் அனுபவத்தைப் பெறுவதற்கும் ஒரு சிறிய வாய்ப்பையே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். “இந்தக் கட்டத்தில் எனக்குப் பெரிய பேக்கேஜ் தேவையில்லை. நான் கற்றுக்கொண்டு எனது பங்களிப்பை வழங்கக்கூடிய எந்தவொரு உண்மையான தொழில்நுட்பப் பணியாக இருந்தாலும் சரி, ஆரம்பக்கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அதில் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் எனக்குத் தேவை அனுபவச் சான்றிதழ் மட்டுமே என்று அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். இந்த இளைஞரின் பதிவு தற்போதைய ஐடி சந்தையில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில் உள்ள சவால்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.