ஜப்பானின் இபராகி மாகாணத்தில், தன்னுடன் வசித்து வந்த 42 வயது பெண்ணின் உதடுகளை ஊசி மற்றும் நூல் கொண்டு தையல் போட்டு சித்திரவதை செய்த 49 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இபராகி பகுதியைச் சேர்ந்த மசே சகுராய் (49) என்ற பகுதிநேர ஊழியர், கடந்த ஜூன் 29 அன்று தனது வீட்டில் தங்கியிருந்த பெண்ணின் உதடுகளைக் கொடூரமாகத் தைத்துக் காயம் ஏற்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2025 ஏப்ரல் முதல் சகுராயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, எப்படியோ வீட்டை விட்டுத் தப்பிய அந்தப் பெண், அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்று, தனக்கு உதவி செய்யுமாறு ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் காட்டியுள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் உடனடியாக ஜூன் 30 மதியம் 1:30 மணியளவில் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
போலீஸ் விசாரணையில், சகுராய் தனக்குக் கொடுத்த சித்திரவதைகளால் பயந்துபோய்த் தான் வீட்டை விட்டு ஓடாமல் முடங்கிக் கிடந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விசித்திரக் கொடூரத்தின் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பது குறித்து போலீசார் இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. மேலும், இந்தச் சம்பவம் நடந்த போது வீட்டில் வேறு நபர்கள் யாரேனும் இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
சகுராயின் முன்னாள் சக ஊழியர் ஒருவர் கூறுகையில், வீடற்ற மற்றும் ஆதரவற்ற இளம் பெண்களுக்குச் சகுராய் உதவி செய்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த வீட்டிற்குச் சென்ற சகுராயின் நண்பர் ஒருவர், அங்கு இரண்டு அல்லது மூன்று பெண்களும், ஒரு பள்ளி மாணவனும் வசித்து வந்ததாகக் கூறியுள்ளார். சகுராய் ஆதரவற்ற பெண்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து இத்தகைய அராஜகங்களில் ஈடுபட்டாரா என்ற கோணத்தில் ஜப்பான் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
