மகாராஷ்டிர மாநிலம் சோப்தா நகரில் தனியார் பால் பண்ணை ஒன்றில் வாங்கப்பட்ட பால், காய்ச்சிய பிறகு ரப்பர் போல நீளும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோப்தா பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தன்ராஜ் பாவிஸ்கர் என்பவர், அங்குள்ள ஒரு தனியார் டெய்ரியில் பால் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று வழக்கம்போல் பாலைக் காய்ச்சிய போது, அது சாதாரண நிலைக்கு மாறுவதற்குப் பதிலாக ஒட்டும் தன்மையுடனும், ரப்பர் போல நீளக் கூடியதாகவும் மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதனை அவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திர வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தனியார் பால் பண்ணையின் பாலில் ரசாயனங்கள் அல்லது செயற்கை பொருட்கள் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இத்தகைய கலப்படக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் தன்ராஜ், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறைக்கு உடனடியாகத் தொலைபேசி வாயிலாகப் புகார் அளித்துள்ளார். மாநில ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான அதிகாரிகள் தற்பொழுது சோப்தா நகருக்கு விரைந்து, சம்பந்தப்பட்ட டெய்ரியில் இருந்து பாலின் மாதிரிகளை ஆய்வக சோதனைக்காகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த அறிவியல் பூர்வ சோதனை அறிக்கை வந்த பிறகே பாலில் என்னென்ன ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன என்பது முழுமையாகத் தெரியவரும்.
View this post on Instagram
