உத்தரப் பிரதேச மாநிலம், சகாரன்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, சையத் மஜ்ரா கிராமத்தில் உள்ள சுடுகாடு மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மழையின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல கல்லறைகள் சேதமடைந்தன.
இதில் சில உடல்கள் வெளியே வந்து மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட அவலமான காட்சி, அப்பகுதி மக்களைக் கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம மக்கள் மற்றும் ஆஷு, பாஷா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், மிகுந்த மரியாதையுடன் அந்த உடல்களை மீட்டெடுத்து, உரிய மத சடங்குகளுடன் மீண்டும் நல்லடக்கம் செய்தனர்.
இந்த நெஞ்சை உருக்கும் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள கிராம மக்கள், சுடுகாட்டின் பாதுகாப்பிற்காக நிர்வாகம் எந்தவிதமான முன்நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மழைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க, சுடுகாட்டைச் சுற்றி வலுவான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும் மற்றும் முறையான வடிகால் வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இயற்கை பேரிடர் காலங்களில் இத்தகைய அசம்பாவிதங்களைத் தடுக்கத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதை இந்தத் துயரச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
