மும்பையில் செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய 22 வயது இளைஞர் மயங்க் லோஹர், அந்தேரியிலிருந்து விரார் செல்லும் உள்ளூர் ரயிலில் ஏறியபோது நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

ரயிலின் கதவை மூடுவது அல்லது திறப்பது தொடர்பாக ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் முற்றி, சக பயணி ஒருவன் மயங்க் லோஹரை கூர்மையான ஆயுதத்தால் வயிற்றில் குத்தியுள்ளார்.

ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், போரிவலி ரயில் நிலையத்திற்கு வரும் முன்பே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. ரயில் நின்றதும் அந்த நபர் தப்பி ஓடிவிட, படுகாயமடைந்த மயங்க் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, தாக்குதல் நடத்திய 30 வயதுடைய சுவர்ணா என்பவனைக் கண்டறிந்தனர். மிரா சாலையில் வசித்து வரும் அவன், சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது பன்வெல் பகுதியில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

“>

 

ரயிலில் கதவை மூடுவது போன்ற சாதாரண விஷயத்திற்காக நடந்த இந்தத் தாக்குதல் மும்பை பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனை இழந்த மயங்க் லோஹரின் தந்தை, குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.