இன்றைய அவசர உலகில் ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி சேவைகள் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், அதில் பெண் பயணிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதற்குச் சான்றாக, அனுஷ்கா என்ற இளம் பெண் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் தனது இலக்கை அடைந்த பிறகு, அவரை அழைத்துச் சென்ற ரேபிடோ ரைடர், அவரது மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி “விசித்திரமாக” உரையாடத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து, “எனது தனிப்பட்ட மொபைல் எண் எப்படி அவருக்குத் தெரிந்தது? ஒரு பயணம் முடிந்த பிறகு இப்படித் தொடர்பு கொள்வது எவ்வளவு பெரிய அத்துமீறல்?” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Anushka_Official☀️ (@aanu_shka3)

இந்தப் பதிவு இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி, பல பெண்களும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற அனுபவங்களைக் கமெண்ட் செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தரவுப் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடுத்து, ரேபிடோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. “ரைடரின் இந்தச் செயல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது எங்கள் சேவை விதிமுறைகளுக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ள நிறுவனம், அந்தப் பெண்ணின் ரைடு ஐடி மற்றும் மொபைல் எண்ணைப் பெற்று, சம்பந்தப்பட்ட ரைடர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.

இருப்பினும், செயலிகளில் கால் மாஸ்கிங் போன்ற வசதிகள் இருந்தும், ரைடர்கள் எப்படி எண்களைச் சேகரிக்கிறார்கள் என்பது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.