தவெக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பதவியேற்ற ஒரு மாத காலத்திலேயே நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்கள் நள்ளிரவில் வீதிக்கு வந்து போராடும் நிலையை இந்த அரசு உருவாக்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் மவுனம் காப்பதையும், மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டிற்குப் பொறுப்பேற்றுத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, சிசிடிவி வீடியோக்கள் மற்றும் சதித் திட்டங்கள் எனத் திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுவதையும் அவர் கண்டித்துள்ளார்.

மின்வாரியப் பணியாளர்கள் மீதும், திருட்டுச் சம்பவங்கள் மீதும் பழி போட்டுப் பொய் தகவல்களைப் பரப்புவதை விடுத்து, மக்கள் படும் துயரைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திராவிட மாடல் ஆட்சியில் மின் தேவை பல மடங்கு அதிகரித்த போதிலும், சீரான மின்சாரத்தை வழங்கியதை புள்ளிவிவரங்களுடன் செந்தில் பாலாஜி சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதிய மின்மாற்றிகள் அமைத்தல் மற்றும் மின்வாரியத்தைச் சீரமைத்தல் எனப் பல திட்டங்களைச் செயல்படுத்தியதை அவர் நினைவுபடுத்தினார்.

தற்போதைய அரசு நிர்வாகத்தைக் கையாளத் தெரியாமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்கும், விளம்பரங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகச் சாடியுள்ள அவர், இனியாவது இந்த அரசு ரீல்ஸை மறந்துவிட்டு ரியாலிட்டிக்கு வர வேண்டும் என்றும், மக்களை ஏமாற்றுவதை நிறுத்திவிட்டு சீரான மின்சாரத்தை வழங்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.