விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்து, பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து கடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்த விஜயதரணி, தற்போது பா.ஜ.க-விலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தேர்தல் சமயத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் தனக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருந்த அவர், இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெக-வில் ஐக்கியமானார்.

தவெக-வில் இணைந்த விதம் தனக்கு ஒரு குடும்ப பிணைப்பாடு போன்ற நெகிழ்ச்சியையும், மனதளவில் புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.​தவெக-வில் இணைந்த கையோடு தமிழக பா.ஜ.க மற்றும் அண்ணாமலையை விஜயதரணி மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “பா.ஜ.க-வில் இருந்த சிறிய கூட்டத்தையும் அண்ணாமலை தன் பக்கமே சேர்த்துக்கொண்டார்; அங்கே இப்போது வெறும் நான்கு அல்லது ஐந்து தலைவர்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், தலைவர்கள் இல்லாததால் இனி அந்த வண்டி ஓடாது என்றும், பா.ஜ.க என்பது தற்போது ஸ்டார்ட் ஆகாத ஒரு வாகனமாக நடுரோட்டில் நிற்கிறது என்றும் விஜயதரணி அதிரடியாகக் குத்திக் காட்டியுள்ளார். இந்த காரசாரமான பேட்டி தற்போது எக்ஸ் தளம் மற்றும் டெய்லிஹண்ட்டில் பயங்கர விவாதத்தைக் கிளப்பியுள்ளது.