ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளால் தமிழகத்தில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் பல பெண்களைப் பாலியல் ரீதியாக மிரட்டிப் பாதிக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளதையும், ஆலந்தூரில் மற்றொரு நிர்வாகியான வேம்புலி பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

50-க்கும் மேற்பட்ட பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியைத் தருவதாகவும், ஆளுங்கட்சி நிர்வாகிகள் இவ்வளவு கொடும் குற்றங்களில் ஈடுபடுவது அந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியேற்றபோது “எல்லாரும் நல்லா இருப்போம்” என்று கூறியதை நினைவுபடுத்திய எடப்பாடி பழனிசாமி, சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாதபோது மக்கள் எப்படி நன்றாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல் துறை தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு எந்தப் பயமும் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இந்த வழக்குகளில் எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தற்போதைய அரசை ‘பொய்க்கால் குதிரை அரசு’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.