விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி வருவதை விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி கடுமையாகச் சாடியுள்ளார்.

அதிமுக வேட்பாளர்களின் வெற்றி பாமக போட்ட பிச்சை என்று சி.வி. சண்முகம் கூறியது தொண்டர்களைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் தோல்விக்கு சண்முகத்தின் செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தவெக-வில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில், அக்கட்சியின் தூண்டுதலின் பேரில் அதிமுகவை உடைக்க சி.வி. சண்முகம் முயற்சிப்பதாகப் பசுபதி குற்றம் சுமத்தினார்.

ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.க்களைத் தவெக-வில் இணைக்க அவர் முயன்றது தோல்வியில் முடிந்ததால், இப்போது எடப்பாடி பழனிசாமியைத் தரக்குறைவாகப் பேசி வருகிறார் என்று குறிப்பிட்டார். சி.வி. சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று சவால் விடுத்த பசுபதி, இனியாவது அவர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாகப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.