போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் சர்தாக் யாதவ், தவறுதலாக பார்மலின் ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி, சிறுவனின் உடலில் இருந்த நரம்பு வழி குழாயில் அடைப்பை நீக்க முயன்ற செவிலியர், முறையாகச் சரிபார்க்காமல் ‘F’ என்று குறிக்கப்பட்டிருந்த ஊசியைப் பயன்படுத்தியுள்ளார்.
இதைக் கண்ட சிறுவனின் தந்தை தடுக்க முயன்றும், செவிலியர் அதைக் கண்டுகொள்ளாமல் ஊசியைச் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திலேயே சிறுவன் மயக்கமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தான். உயிரியல் மாதிரிகளைப் பாதுகாக்கப் பயன்படும் பார்மலின், மனிதர்களுக்குச் செலுத்தப்படுவது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனை நடத்திய விசாரணையில், செவிலியரின் கவனக்குறைவால்தான் சிறுவனுக்கு பார்மலின் செலுத்தப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், அலட்சியமாகச் செயல்பட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போபால் காவல்துறை, அவர்களைத் தேடி வருகின்றனர். ஒரு உயிரைக் காக்க வேண்டிய மருத்துவமனையில், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் இத்தகைய உயிரிழப்பு ஏற்பட்டது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
