செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது பணி பறிபோயுள்ளதாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் ஒவ்வொரு பணியிலும் தேவையற்ற முறையில் AI புகுத்தப்பட்டபோதே தனக்கான ஆபத்தை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு கடினமாக உழைத்தாலும், நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் ஊழியர்களின் பணி நீக்கப்படுவதை அவர் கவலையுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள சூழலில் வேலை தேடும் முறை மிகவும் கடினமாக இருப்பதாகவும், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தாலும் ஒரு நேர்காணல் கிடைப்பதே அரிதாக உள்ளது என்றும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கவலைக்கு இணையவாசிகள் பலர் ஆதரவு தெரிவித்ததுடன், தங்களுக்கும் இதே போன்ற அனுபவங்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். நிறுவனங்கள் இதைப் ‘உற்பத்தித்திறன்’ என்று அழைத்தாலும், இறுதியில் இது வேலைவாய்ப்புகளைக் குறைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேலை தேடும் முயற்சியை உடனடியாகத் தொடங்குமாறும், வெறும் வேலைவாய்ப்பு இணையதளங்களை மட்டும் நம்பியிருக்காமல், சுய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துமாறும் சக பயனர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பல மாதங்கள் போராடி வேலை தேடிய தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து, அந்த நபருக்குத் துணிச்சலையும் நம்பிக்கையையும் ஊட்டியுள்ளனர்.