உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்பத் தகராறு காரணமாகத் தந்தை ஒருவரே தனது இரண்டு இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சசி ரஞ்சன் மிஸ்ரா, தனது தாயின் மறைவுக்குப் பிறகு கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், வேலையிழந்ததால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டினால் மது மற்றும் போதை மாத்திரைகளுக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தான் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், தனது மறைவுக்குப் பிறகு பெண் குழந்தைகளின் நிலை என்னவாகும் என்ற அச்சத்தில், அவர்களை முதலில் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்ததாகப் போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்கு முன்னதாகவே, தான் வாழ விரும்பவில்லை என்றும் குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்லப் போவதாகவும் தனது மனைவியிடம் அவர் கூறியுள்ளார். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கசப்பான உறவும், அவர்கள் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வந்ததும் இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
தற்போது, உயிரிழந்த குழந்தைகளின் தாயார் அளித்த புகாரின் பேரில் நௌபஸ்தா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சசி ரஞ்சன் மிஸ்ராவைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 11 வயதான அந்தச் சிறுமிகள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
