நீண்ட காலமாகப் பகை நாடுகளாக இருந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் முடிவுக்கு வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஒப்பந்த விவகாரம் ஈரானுக்குள் கடுமையான அரசியல் புயலையும் உள்நாட்டு மோதலையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றைத் தொடர்ந்து, அந்நாட்டின் தீவிரவாத மற்றும் பழமைவாத அமைப்புகள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராகத் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.

ஈரானின் மஷாத் நகரில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தின் முன்பாகத் திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், “வெளியுறவு அமைச்சர் அரக்சி உடனடியாகப் பதவி விலக வேண்டும்” என்றும், “ஈரானை அவமானப்படுத்திய அரக்சி ஒழிக” என்றும் ஆக்ரோஷமாக முழக்கமிட்டு வருகின்றனர். அமெரிக்காவுடன் போடப்படும் இந்த ஒப்பந்தம் ஈரானின் இறையாண்மைக்கும் மூலோபாய நலன்களுக்கும் எதிரானது என்றும், அமெரிக்காவிடம் ஈரான் அரசு தேவையின்றி மண்டியிடுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்த ஏராளமான பெண்கள், கையில் சிவப்பு மற்றும் கருப்பு நிறக் கொடிகளை ஏந்தியபடி வெளியுறவுத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது பதிவாகியுள்ளது. உலக அளவில் மிக முக்கிய கடல்சார் வணிகப் பாதையாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் நீரிணை’ மீதான ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் பலவீனப்படுத்தும் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

தனது நேர்காணலில் பேசிய வெளியுறவு அமைச்சர் அரக்சி, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக அமெரிக்கா விதித்திருந்த கடற்படை முற்றுகையை  இந்த ஒப்பந்தத்தின் மூலம் வாபஸ் பெற அமெரிக்கா சம்மதித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், ஹார்முஸ் நீரிணையின் நிர்வாகம் இனி பழையபடி ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்காது என்றும் அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டதே இந்த மக்கள் கொந்தளிப்பிற்குக் காரணமாகும்.

தற்போது தலைநகர் தெஹ்ரானிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வெளியுறவு அமைச்சருடன் சேர்த்து ஈரான் நாடாளுமன்றச் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப்என்பவரும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருவதால் ஈரானில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.