மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டம் அம்பாட் பகுதியில் திருமணமான பெண் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாபாசாகேப் ரத்தோடு என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

காதலி தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சேர்ந்து வாழத் துடித்த நிலையில், ஏற்கனவே திருமணமான காதலன் ரத்தோடுக்கு அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல விருப்பமில்லை. இதனால் காதலியின் தொல்லையைத் தீர்க்க ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினான்.

நள்ளிரவில் காதலியை ஏரிக்கரைக்கு வரவழைத்த அவன், “இந்த உலகம் நம்மை வாழ விடாது, அதனால் நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்வோம்” என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசி காதலியை நம்ப வைத்துள்ளான்.

இருவரும் கைகோர்த்து தண்ணீரில் குதிப்போம் எனக்கூறி பெண்ணை ஆற்றில் தள்ளிவிட்டு, தானும் குதிப்பது போல நடித்திருக்கிறான். நீச்சல் தெரிந்த காதலன் சாமர்த்தியமாக கரை ஏறித் தப்பிக்க, அவனை நம்பி தண்ணீரில் குதித்த அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

காதலி இறந்துவிட்டதை உறுதி செய்த பிறகு, இது தற்கொலை போல காட்ட முயன்று போலீசில் சரணடைந்தான். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. தற்போது அந்த கில்லாடி காதலனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.