மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், போலி சாமியார்கள் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் அவலம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஷேகாபூர் கிராமத்தில் போலி சாமியார் ஒருவன் நடத்தி வரும் அராஜகம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போலி சாமியார் ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது வீட்டில் ‘தர்பார்’ என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறான். அங்கு வரும் அப்பாவி மக்களிடம், தனக்கு தெய்வீக சக்தி இருப்பதாகவும், தீராத நோய்கள், செய்வினை கோளாறுகள் மற்றும் பேய் பிசாசு பிடித்துள்ளவர்களைத் தனது மந்திர சக்தியால் குணப்படுத்த முடியும் என்றும் கூறி ஏமாற்றி வருகிறான்.

சாமி ஆடுபவர்களிடம் பேசி, அவர்களுக்குள் இருப்பது யார், அவர்கள் ஏன் தொல்லை கொடுக்கிறார்கள் என்ற நாடகத்தை அரங்கேற்றும் அந்தச் சாமியார், சிகிச்சையின் பெயரால் பெண்களையும் ஆண்களையும் அமானுஷ்யமான முறையில் சித்திரவதை செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

உடம்பில் பெரிய நோய் இருந்தாலோ அல்லது பேய் பிடிந்திருந்தாலோ அதற்குத் தன்னிடம் ‘கைக்கண்ட மருந்து’ இருப்பதாகக் கூறும் அந்தச் சாமியார், சாதாரண தண்ணீரில் தேங்காய் எண்ணெயைக் கலந்து குடிக்கக் கொடுக்கிறான். இதை குடித்தால் உடலில் இருக்கும் பேயும் நோயும் ஓடிவிடும் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்கிறான். அறியாமையில் இருக்கும் அந்த கிராம மக்களும் அதனை உண்மை என நம்பி, சாமியாரின் சித்திரவதைகளுக்கு உடன்படுகின்றனர்.

இந்த மோசடி குறித்து உள்ளூர் சமூக ஆர்வலர் கணேஷ் அந்தாரே என்பவர் காவல் துறையிடம் தொடர்ந்து பலமுறை புகார்களை அளித்துள்ளார். ஆனால், உள்ளூர் போலீஸார் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருப்பதால், அந்தப் போலி சாமியாரின் துணிச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரம் மாவட்ட நிர்வாகத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ள நிலையில், இதுபோன்ற போலித்தனம் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கடுமையான கோரிக்கைகள் எழுந்துள்ளன.