உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ‘சூப்பர்நோவா ஸ்பைரா டவர்ஸ்’ என்ற அதிநவீன சொகுசு குடியிருப்பு வளாகத்தில், மூன்று வெளிநாட்டுப் பெண்கள் நீச்சல் குளம்  அருகே அரைகுறை ஆடையுடன் கஞ்சா புகைத்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குடும்பத்தினரும் குழந்தைகளும் அடிக்கடி வந்து செல்லும் பொதுவான பொழுதுபோக்கு இடமான நீச்சல் குளப் பகுதியில், அந்தப் பெண்கள் புகைபிடித்துக் கொண்டிருந்ததை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் கவனித்துள்ளார். உடனடியாக அவர்களிடம் சென்ற பாதுகாப்பு ஊழியர், பொது இடத்தில் புகைபிடிக்கக் கூடாது என எச்சரித்து தடுத்துள்ளார். ஆனால், அந்த வெளிநாட்டுப் பெண்கள் அவரது எச்சரிக்கையை முற்றிலும் அலட்சியப்படுத்திவிட்டு, தொடர்ந்து தங்களின் வேலையிலேயே மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

 

அவர்கள் புகைத்தது கஞ்சாதானா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையிலும், இந்த வீடியோ இணையத்தில் கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்தியர்களுக்கு ஒரு சட்டம், வெளிநாட்டினருக்கு ஒரு சட்டமா? என நெட்டிசன்கள் பலரும் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைத்தளவாசி ஒருவர் பதிவிடுகையில், “இந்தியாவில் உள்ள உள்ளூர் மக்கள் பொது ஒழுக்கத்தையும் விதிகளையும் பின்பற்றுமாறு எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால் வெளிநாட்டு குடிமக்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது?” எனச் சாடியுள்ளார்.

மற்றொருவரோ, “நாகரிகம், ஒழுக்கம் என மேடைகளில் பெரிய அளவில் பேசும் வெளிநாட்டினர், இங்கு வந்து விதிகளை மதிக்காமல் அராஜகம் செய்கிறார்கள்; உள்ளூர் மக்கள், பணக்காரர்கள் அல்லது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பாய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், வெறும் வீடியோவை மட்டும் வைத்துக்கொண்டு அவர்கள் கஞ்சாதான் புகைத்தார்கள் என அவசரமாக முடிவுக்கு வரக்கூடாது என்றும் சில பயனர்கள் எச்சரித்துள்ளனர்.