மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கேடி கன்காட் பகுதியில், 18 வயதே ஆன அனிதா என்ற திருமணமான இளம் பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூரஜ் தாக்கூர் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட அனிதா, தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், “உங்களையெல்லாம் சந்தோஷப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்? என் கணவரை விட்டு என்னை பிரியச் சொல்கிறீர்கள், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியாது; அவரைப் பிரிவதற்கு முன்னால் நான் இந்த உலகத்தை விட்டே போய்விடுகிறேன், என்னை மன்னித்துவிடுங்கள்” எனத் தனது குமுறலை எழுதியுள்ளார்.

இச்சம்பவம் நடந்தபோது அனிதா தனது 10 வயது தம்பி ரோஹனுடன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்; தற்கொலை செய்யும் முடிவை எடுத்த அனிதா, தம்பியை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறியுள்ளார்.

அதற்கு அந்தச் சிறுவன் மறுக்கவே, ஆத்திரமடைந்த அனிதா வீட்டில் இருந்த கத்தியைக் காட்டி தம்பியை மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அக்கா கதவைத் திறக்காததால் பயந்துபோன சிறுவன், அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தபோது அனிதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அலறியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன்பே அனிதா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றபோது கயிறு தளர்வாக இருந்ததால் உயிர் தப்பியுள்ளார், ஆனால் இந்த முறை கயிற்றை மிகவும் பலமாக முடிச்சிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அனிதா தனது சொந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் வாட்ஸ்அப் சாட்டிங்கில் தொடர்ந்து பேசி வந்ததும், அது குடும்பத்தினருக்குத் தெரிந்து பஞ்சாயத்து நடந்த போதிலும், அனிதா தனது தந்தையின் மொபைல் மூலமாக மீண்டும் அதே வாலிபரைத் தொடர்புகொண்ட விவகாரமே இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.