நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சக்திவேல், பொக்லைன் டிரைவராகப் பணியாற்றி வந்தார். திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காகச் சென்றபோது, அங்கிருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சக்திவேல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரைத் தனது ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த மாணவி சிகிச்சைக்காகத் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தச் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து, சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
