பிரபல நகைச்சுவை கலைஞர் சமய ரெய்னா தொகுத்து வழங்கும் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், சாஷி ஜா என்ற பெண் போட்டியாளரின் ஆடிஷன் சமூக ஊடகங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேடையில் தன்னை ஒரு “ஆண்களை வெறுப்பவர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தனக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காது என்றும், எதிர்காலத்தில் தனக்கு வரப்போகும் கணவரை குடித்துவிட்டு பெல்ட்டால் அடிப்பது தனது கற்பனை என்றும் பேசினார்.

“>

மேலும், தனது தந்தை, சகோதரர் மற்றும் தாத்தா உள்ளிட்ட சொந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் மீதும் தனக்கு வெறுப்பு இருப்பதாகக் கூறி அடுக்கடுக்கான சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். அவரது இந்த விசித்திரமான மற்றும் ஆக்ரோஷமான பேச்சால் நடுவர் குழுவில் இருந்த சமய ரெய்னா, தன்மே பட், விஷால் தத்லானி, ரகு ராம் மற்றும் யஷ்ராஜ் மேஹ்ரா ஆகியோர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

ஆண்கள் மீதான இந்த கடுமையான வெறுப்புக்கு என்ன காரணம் என்று நடுவர்கள் கேட்டபோது, அது தலைமுறை தலைமுறையாக தொடரும் மன உளைச்சல் என்று அந்தப் பெண் பதிலளித்தார். இறுதியில், அவரது செயல்பாட்டை ஏற்காத நடுவர்கள் அனைவரும் அவருக்கு ‘பூஜ்ஜியம்’ மதிப்பெண்களை வழங்கினர்.

இதன் மூலம், இந்த இரண்டாவது சீசனில் அனைத்து நடுவர்களிடமிருந்தும் ஒட்டுமொத்தமாக பூஜ்ஜியம் புள்ளிகளைப் பெற்ற முதல் போட்டியாளர் என்ற பெயரை சாஷி ஜா பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் கிளிப்புகள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.

பலர் இந்த பெண்ணின் பேச்சு நச்சுத்தன்மை வாய்ந்த பெண்ணியம் என்றும், ஆண்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்புவதாகவும் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில், இது ஒரு நகைச்சுவை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஷோ என்பதால், பார்வையாளர்களைக் கவரவும், வைரல் ஆகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு “ரேஜ் பெய்ட்” நாடகம் என்றும் சிலர் வாதிடுகின்றனர்.

தனது கருத்துக்கள் சில தவறானவை மற்றும் ஆபத்தானவை என்பதை அந்தப் போட்டியாளரே ஒப்புக்கொண்ட போதிலும், இந்த விவாதம் தற்போதைய சீசனில் சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது.