இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் ஆல்-ரவுண்டரான சாமிந்து விக்ரமசிங்கவின் பந்துவீச்சு ஸ்டைல் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அப்படியே அச்சு அசலாக நினைவூட்டும் வகையில் உள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாமிந்து, வலைப்பயிற்சியில் பந்துவீசும் வீடியோ ஒன்றை அந்த அணி நிர்வாகம் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவரது ரன்னிங் மற்றும் பந்தை ரிலீஸ் செய்யும் விதம் ஜோஃப்ரா ஆர்ச்சரை போலவே இருப்பதாகக் கூறி இணையத்தில் பயங்கர வைரலாக்கி வருகின்றனர்.
Sri Lanka Bowler Chamindu Wickramasinghe Goes Viral for Jofra Archer Lookalike Bowling Action (Watch Video) https://t.co/nmuwZzmOe2
“>
இந்த வைரல் வீடியோ கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், யாழ்ப்பாணம் கிங்ஸ் அணியில் விளையாடும் சக வீரரான டேவிட் வீஸ், இந்த வீடியோவில் ஜோஃப்ரா ஆர்ச்சரைக் டேக் செய்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ஜோஃப்ரா ஆர்ச்சர், “நான் பார்த்ததிலேயே இதுதான் மிகச் சிறந்தது” என்று சாமிந்துவின் பந்துவீச்சு ஸ்டைலுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த ஒரு பந்துவீச்சாளரிடமிருந்தே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது சாமிந்து விக்ரமசிங்கவை ஒரே இரவில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது.
23 வயதான சாமிந்து விக்ரமசிங்க, கண்டியைச் சேர்ந்த ஒரு திறமையான இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த 2024 ஜூலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டியிலும், நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணிக்காக அறிமுகமானார்.
தனது முதல்தர கிரிக்கெட் அறிமுகப் போட்டியிலேயே 106 ரன்கள் குவித்து அசத்திய இவர், தற்போது எல்பிஎல் தொடரில் யாழ்ப்பாணம் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சமூக ஊடக அங்கீகாரம், அவரது சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் கூடுதல் கவனத்தையும் தந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
