தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி, அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதார், வங்கி கணக்கு விவரங்கள், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களைக் கல்வித்துறை சார்ந்த இணையதளத்தில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டாலோ அல்லது தகுதியான மாணவர்கள் விடுபட்டாலோ, அதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
மாணவர்களின் நலத்திட்டங்கள் தடையின்றி கிடைப்பதையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யவே இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
