தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக வெற்றி கழகம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெகவை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும் என்று ஒரு பக்கம் ராஜதந்திரமாகப் பேசினாலும், 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விஜய்யின் வருகையால் பெரும் ஈர்ப்புக்கு உள்ளாகியிருப்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு வரும் களத் தகவல்களின் அடிப்படையில், தவெகவின் பக்கம் இளைஞர்கள் திரள்வது காங்கிரஸின் கவனத்தை ஈர்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சோடங்கரின் இந்தத் திடீர் ‘விஜய் புகழ்’ பேச்சானது, திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் ஒருவேளை உடன்பாடு ஏற்படவில்லை என்றால், காங்கிரஸ் தவெக-வுடன் கூட்டணி வைக்கும் கதவைத் திறந்து வைத்திருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். குறிப்பாக, திமுகவை விட தவெக அதிக இடங்களைக் கொடுக்கத் தயாராக இருப்பதால், காங்கிரஸும் இந்த இளைஞர்கள் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காது என்று சொல்லப்படுகிறது. 2026 தேர்தல் களம் பலமான ‘ட்விஸ்ட்’களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
