தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் பொருட்டு, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ரேஷன் கார்டுகளில் இன்னும் இறந்த நபர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இடம் பெற்றுள்ளதாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் மாறி உள்ளதால் இந்தத் தவறு நடந்துள்ளதாகவும் வந்த புகார்களைத் தொடர்ந்து, கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவை உறுதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சில மாவட்டங்களில் இன்னும் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கும் சூழலில், வேலை காரணமாக வெளியூர்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் கூட வரும் ஜூன் 25-ஆம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்த குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து உடனடியாக நீக்க வேண்டும் எனவும்,இறந்தவர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று அதனை அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பு தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
