அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள ஒரு புதிய சமூக வலைதளப் பதிவு, 2028-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலைச் சுற்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் “TRUMP 2028” என்று எழுதப்பட்ட தொப்பியை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனுடன் “நாம் வெற்றி பெறப் போகிறோம்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதனால், டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஆனால், இந்தப் பதிவு 2028 தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக கருதப்படவில்லை.

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான், 2028-ல் மீண்டும் போட்டியிடுவது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். செய்தியாளர்கள் அவரிடம் அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது, “நான் போட்டியிட விரும்புகிறேன், ஆனால் சட்டம் மிகவும் வலுவாக உள்ளது” என்று அவர் கூறியிருந்தார். அமெரிக்க அரசியலமைப்பின் 22-வது திருத்தத்தின்படி, ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. டிரம்ப் ஏற்கெனவே 2016 மற்றும் 2024 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் 2028-ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது தற்போதைய சட்டப்படி சாத்தியமில்லை.

டிரம்பின் “TRUMP 2028” பதிவு தற்போது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் தற்போதைய பதவிக்காலத்துக்கு பிறகும் டிரம்ப் தொடர்வாரா என்பது குறித்து ஏற்கெனவே பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்பும் சில நேரங்களில் அதுகுறித்து விருப்பம் தெரிவித்ததுடன், அரசியலமைப்பு விதிமுறைகள் தடையாக இருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். 1951-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த 22-வது திருத்தம், அமெரிக்க அதிபர் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக டிரம்பின் புதிய பதிவு சட்டத்தை மாற்றுவதில்லை என்றாலும், அரசியல் விவாதத்தை மட்டும் மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் மட்டுமே நான்கு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் 1933 முதல் 1945 வரை பதவியில் இருந்தார். அதன் பின்னரே அதிபர் பதவிக்கான இரண்டு முறை தேர்தல் வரம்பை உறுதி செய்ய 22-வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே, தற்போதைய அரசியலமைப்பு விதிகளின்படி டிரம்ப் 2028-ல் மூன்றாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. இருப்பினும், “TRUMP 2028” என்ற அவரது பதிவு அமெரிக்க அரசியலில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.