புனேவில் உள்ள கொண்ட்வா பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவருக்கு அவரது மாமனார் மற்றும் கணவர் குடும்பத்தினரால் நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார் ஒரு ஓய்வுபெற்ற உதவி காவல் ஆணையர் என்பதுதான் இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

மேலும் அந்தப் பெண் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருந்த நிலையில், அவரது கணவர் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயமாக வேலையை விட வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல விடாமல் வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து, தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இந்த கொடுமைகளின் உச்சக்கட்டமாக, ஓய்வுபெற்ற ஏசிபி-யான மாமனார், தனது சொந்த மருமகள் என்றும் பாராமல் அவரிடம் தவறான முறையில் நடந்து கொண்டு, ‘உடலுறவு’ கொள்ளுமாறு வற்புறுத்தி மிரட்டியுள்ளார். மாமனாரின் இந்த அநாகரிகமான கோரிக்கையாலும், கணவர் குடும்பத்தினரின் தொடர் சித்திரவதையாலும் மனமுடைந்த அந்தப் பெண், இறுதியாக கொண்ட்வா காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் ஓய்வுபெற்ற ஏசிபி மாமனார் மற்றும் கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்தை காக்க வேண்டிய உயர் பதவியில் இருந்த ஒருவரே, தன் வீட்டுப் பெண்ணிற்கு இப்படி ஒரு துரோகத்தைச் செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.