மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மே 12 அன்று நடிகை ட்விஷா சர்மா தனது கணவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நபர் ஒருவர், தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்றபோது 370 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொடுத்த சிக்கன் பிரியாணிக்கான காசை அவரிடமிருந்து எப்படியாவது ‘வசூல்’ செய்ய வேண்டும் என்று பேசிய வீடியோவும் இணையத்தில் பயங்கரமாக வைரலானது.
View this post on Instagram
இந்த இரண்டு அடுத்தடுத்த சம்பவங்களை முன்வைத்து, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப் கோச்சாக (Relationship coach) இருந்து வரும் சேதனா சக்ரவர்த்தி என்பவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், “மனநலம் பாதிக்கப்பட்ட மாமியார்கள், கொடுமைப்படுத்தும் கணவர்கள், மற்றும் 370 ரூபாய் பிரியாணி வாங்கிக் கொடுத்துவிட்டுப் பெண்களிடம் எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் சுயநல ஆண்களுக்கு மத்தியில், இந்தியப் பெண்கள் தங்களின் வாழ்நாளில் சிங்கிளாக (Single) இருப்பதே மேல்; தயவுசெய்து இந்திய ஆண்களைத் திருமணம் செய்யாதீர்கள்” என்று அவர் அதிரடியாகப் பேசியுள்ளார்.
மேலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5,000-க்கும் மேற்பட்ட வரதட்சணை மரணங்களும், சுமார் 1.4 லட்சம் குடும்ப வன்முறை வழக்குகளும் பதிவாவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதுபோன்ற முதுகெலும்பில்லாத ஆண்களுக்காகப் பெண்கள் தங்களின் வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது எனத் தனது கேப்ஷனில் காரசாரமாக எழுதியுள்ளார்.
இவரின் இந்த அதிரடி கருத்துக்குப் பல இந்தியப் பெண்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வெளிநாட்டுப் பெண்கள் சிலர் தங்களின் இந்தியக் கணவர்கள் தங்களை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொள்வதாகவும், இது போன்ற ஒட்டுமொத்தமான அவதூறுப் பரப்புரைகள் ஆபத்தானவை என்றும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருவதால் இணையமே தற்போது இரண்டாகப் பிரிந்து மல்லுக்கட்டி வருகிறது.
