மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடமும் குடும்பத்தினரிடமும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், சிறு வயது முதலே நாட்டின் விடுதலைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் போராடிய ஒரு உன்னதமான மனிதரின் இன்றைய நிலை கண்டு மிகுந்த மனவேதனை அடைவதாகத் தெரிவித்தார்.

மேலும் கொள்கைப் பிடிப்பும், சமரசமற்ற உழைப்பும் கொண்ட நல்லகண்ணு அவர்களின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்ட நிலையில், அவரது தற்போதைய உடல்நிலையை விவரிக்கும் போது மன்சூர் அலிகான் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

இந்நிலையில் “எளிமையின் சிகரமாக வாழ்ந்து வரும் ஒரு மாபெரும் தலைவர் இன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது தாங்க முடியாத துயரம்” எனக் குறிப்பிட்ட அவர், நல்லகண்ணு அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.