மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரின் பிதர்வார் பகுதியில், இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை குச்சியால் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நாயை, அந்த நபர் திடீரென குச்சியால் மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார்.

நாய் வலியால் துடித்து தப்பிக்க முயன்றும் விடாமல் தாக்கியதில் அந்த விலங்கு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான வீடியோ வெளியான பிறகு, விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், சிசிடிவி காட்சிகள் மூலம் இந்தச் சம்பவம் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், இதுவரை யாரும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

“>

 

முறையான புகார் அளிக்கப்பட்டால், விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.