பெங்களூருவில் மகப்பேறு கால புகைப்படப் பிடிப்பின் போது, மூன்று வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் மகனான லக்ஷ்மீர், தனது தாயின் போட்டோஷூட் நடந்த இடத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான்.
எட்டு மாத கர்ப்பிணியான சுவாதி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஒரு சிறிய தண்ணீர்த் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்துள்ளான்.
சிறுவன் காணாமல் போனதை யாரும் கவனிக்காத நிலையில், நீண்ட நேரத்திற்குப் பிறகே அவன் தண்ணீரில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான், ஆனால் மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிறுவனின் தந்தை பெங்களூரு விரைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் யாருடைய அலட்சியமாவது உள்ளதா என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
