உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரதீக் குமார் சர்மா என்ற மருந்துக் கடை உரிமையாளர், கடந்த 2017-ஆம் ஆண்டு நேஹா சர்மா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், நேஹாவிற்கு அவரது கணவரின் நண்பரான ஆயுஷ் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த உறவிற்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட நேஹாவும் ஆயுஷும் இணைந்து ஒரு கொடூரமான சதித்திட்டத்தைத் தீட்டினர்.

கடந்த மார்ச் 2024-இல், தனது பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி கணவரை லக்னோவிற்கு நேஹா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு காதலன் ஆயுஷின் உதவியுடன் கணவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக உடலை அங்கேயே எரித்துவிட்டு, எதுவும் தெரியாதது போல நேஹா மட்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். கணவர் எங்கே என்று குடும்பத்தினர் கேட்டபோது, கார் பழுதாகிவிட்டதாகவும் அவர் விரைவில் வருவார் என்றும் கூறி ஏமாற்றியுள்ளார்.

சில நாட்களில் குழந்தைகளுடன் நேஹா தலைமறைவானதால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் செல்போன் ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த கான்பூர் நீதிமன்றம், ஆதாரங்களை மறைத்ததற்கும் கொலை செய்ததற்கும் நேஹா மற்றும் அவரது காதலன் ஆயுஷ் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்தது.

இந்தத் திட்டமிட்ட படுகொலைக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பல மாதப் போராட்டத்திற்குப் பிறகு தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாகப் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.